ஆஞ்சநேயரின் விசேஷம்:

கோவிலுக்கு வெளியே, “சிறிய திருவடி” என்றழைக்கப்படும் ஆஞ்சநேயர், இடையில் ஒரு சிறிய குத்து வாளுடன், நின்ற திருக்கோலத்தில் ஸேவை ஸாதிக்கின்றார். இவர் ஒரு வரப்பிரஸாதி. தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிய ஆஞ்சநேயருக்கு, ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில், பக்தர்கள் மாலை அணிந்து ஒரு மண்டலம் வரை தீவிர விரதம் அனுஷ்டித்து, தங்கள் வேண்டுதலைப் பூர்த்திசெய்து கொள்கின்றனர்.

இந்தக் கோவிலின் விசேஷமான நிகழ்ச்சி என்று ஒன்றைக் கூறவேண்டுமானால், இக் கோவிலின் திருப்பணி முதலில் இந்தச் சிறிய திருவடியில் தொடங்கி, படிப்படியாக நடந்தேறி, இறுதியில் விமானத் திருப்பணியில் நிறைவடைந்தது. எவ்வளவோ முயன்றும், இந்தச் சிறிய திருவடியின் திருப்பணியை முடிக்காமல் மற்ற திருப்பணிகளை நடத்த முடியவில்லை என்பது அனுபவபூர்வமாக நடந்தேறிய நிகழ்ச்சி. அந்தப் பரமபதநாதரே இவ்வாறு அமைய விரும்பினார் போலும்!

மேலும் பரமபதத்தில் வீற்றிருக்கும் பரமபதநாதனே இத்திருக்கோவிலில் ஸேவை ஸாதிப்பதால்,  இங்கு சொர்கவாசல் என்று ஒரு தனி வாசல் கிடையாது. பிரதான வாசல் வழியே தான் வைகுண்ட ஏகாதசி அன்றும், மற்ற எல்லா விசேஷ நாட்களிலும் வைகுந்தநாதர் புறப்பாடு கண்டருளுகின்றார்.

சத்யவ்ரத க்ஷேத்திரம் என்னும் காஞ்சிபுரத்தில் ஸ்ரீமன் நாராயணன் தேவாதிராஜனாக நின்ற திருக்கோலத்திலும், காவேரிப்பாக்கம் அருகே திருப்பாற்கடல் என்னும் அற்புதப் பதியில் பள்ளிகொண்ட பெருமாளாகவும், வடக்கே சோளசிங்கபுரம் என்னும் சோளிங்கரில் அக்காரக் கனியாகத் திகழும் ஸ்ரீ அமிர்தபலவல்லி ஸமேத ஸ்ரீநரசிங்கப் பெருமாள் எழுந்தருளியிருக்கும் திருக்கோவிலும் எல்லைகள் போல் அமர்ந்திருக்க, திசைமுகன்சேரியில் ஸ்ரீதேவி, ஸ்ரீபூமிதேவி ஸமேதராக, ஆதிசேஷன் படுக்கையில், அமர்ந்த திருக்கோலத்தில் ஸேவை ஸாதிக்கின்றான் ஸ்ரீபரமபதநாதன்.

ஆழ்வார்களால் பாடல் பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களில், 106 திவ்ய தேசங்கள் தான் பக்தர்களால் தரிசிக்க கூடியவை. 107 மற்றும் 108-வது திவ்யதேசங்களாகக் கூறப்படுவது, திருப்பாற்கடலும், பரமபதமும் ஆகும். இந்த இரு திருத்தலங்களும், அர்ச்சாவதர மூர்த்தி கோலத்தில், வேலூர் மாவட்டத்தில், காவேரிப்பாக்கம் அருகே, அபிமான க்ஷேத்திரங்களாக  அமைந்திருப்பது பக்தர்கள் அனைவருக்கும் கிடைத்தற்கரிய பேறுகளாகும்.

தெய்வ பக்தியும், பரந்த உள்ளமும் கொண்ட பெரும்பாலான அன்பர்கள் ஒன்று சேர்ந்து அருள்மிகு கோதண்டராமஸ்வாமி பக்த ஜன ஸபா என்ற ஒரு அமைப்பை நிறுவி, நன்கொடைகள் பெற்று, மேற்படி கோவிலின் பண்டைய அமைப்பு சிறிதும் மாறாமல் திருப்பணி செய்து, கடந்த 23-05-2010 அன்று திருக்கோவலூர் திருவிக்ரம சுவாமி கோவில் தேவஸ்தான எம்பெருமானார் ஜீயரும் மடாதிபதியுமான ஸ்ரீமான் உ. வே.  ஸ்ரீநிவாசராமானுஜாச்சாரியார் ஸ்வாமிகள் அவர்கள் இத்திருக்கோவிலின் ஸம்ப்ரோக்ஷணத்தை நடத்திவைத்தார், ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த வைபவத்தில் கலந்துகொண்டு ஸ்ரீ பரமபதநாதனின் பேரருளைப் பெற்றனர். அன்று முதல் இக்கோவிலின் நித்திய பூஜைகளையும், வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரம், ஸ்ரீ ராம நவமி, ஹனுமத் ஜெயந்தி, நவராத்திரி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை போன்ற விசேஷ உத்ஸவங்களையும் இந்த ஸபா உறுப்பினர்கள், கிராம மக்களின் ஒத்துழைப்போடு, சிறப்பாக நடத்திக்கொண்டு வருகின்றனர்.

இத்திருக்கோவிலின் மூன்றாம் ஆண்டு ஸம்ப்ரோக்ஷன தினத்தை ஒட்டி, கடந்த 23-05-2012-ம் நாள் அன்று ஸ்ரீயோகநரசிம்மருடன் கூடிய ஸ்ரீசக்கரத்தாழ்வார் மூலவர் விக்ரகங்கள் திருக்கோவலூர் எம்பெருமானார் ஜீயர் அவர்களின் அனுக்ரஹத்துடன் பிரதிஷ்டை செய்யப்பட்டு, நித்திய பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.