இத்திருக்கோவில், சென்னை –வேலூர் நெடுஞ்சாலையில் (NH-4), வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டத்தில், காவேரிப்பாக்கம் – சோளிங்கர் சாலையில், சுமார் 7 கி.மீ.தொலைவில், திசைமுகன்சேரி என்னும் ஐயம்பேட்டைசேரி கிராமத்தில் உள்ளது. இந்தத் திருக்கோவில் சுமார் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இத் திருக்கோவிலின் கர்ப்பக்கிரக பின்புற மதில் சுவரில் – “1881-ம் ஆண்டில், 10 பேர் சேர்ந்து இக்கோவிலைத் திருப்பணி செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது”. இக்கோவில் ஸ்ரீகோதண்டராமஸ்வாமி திருக்கோவில் என்று அரசுக்குறிப்பேடுகளில் குறிக்கப்பட்டு, அழைக்கப்பட்டாலும், இங்கு பிரதான மூர்த்தியாக ஸ்ரீபரமபதநாதரே, ஸ்ரீதேவி, ஸ்ரீபூமிதேவி ஸமேதராக வீற்றிருக்கின்றார்.
திருக்கோவிலின் அமைப்பு:
மகா மண்டபத்தின் வலதுபுறம் தாயார் கனகவல்லி என்ற திருநாமத்துடன் பத்மாசனத்தில் தனது திருக்கரங்களில் தாமரை மலர் ஏந்திய எழில் கோலத்துடன் அமர்ந்து சேவை தரும் அழகான தனி ஸன்னதி அமைந்துள்ளது.இடதுபுறம், ஆஸ்தான பெருமாளான ஸ்ரீராமபிரான், ஸீதாதேவியுடனும், இலக்குவன்மற்றும் ஆஞ்சநேயருடனும் நின்ற திருக்கோலத்தில் சேவை ஸாதிக்கின்றார். மற்றும் விஸ்வக்ஷேனர், உடையவர் மற்றும் நம்மாழ்வார் ஆகியோர் மூலவிக்ரகங்களாக எழுந்தருளியுள்ளனர். உற்சவ மூர்த்திகள் – ஸ்ரீவைகுந்தநாதர், ஸ்ரீதேவி, ஸ்ரீபூமிதேவி ஸமேதராக நின்ற திருக்கோலத்திலும், மற்றும் கனகவல்லித் தாயார், சீதாதேவி ஸமேத ஸ்ரீராம, லக்ஷ்மண, ஆஞ்சநேய விக்ரகங்களும், ஸ்ரீசுதர்ஸனர், ஸ்ரீகோபாலகிருஷ்ணன், ஸ்ரீலஷ்மி ஹயக்ரிவர், சக்ரத்தாழ்வாருடன் கூடிய யோக நரசிம்மர், செல்வர் ஆகிய விக்ரகங்களும் இத்திருக்கோவிலில் உள்ளன.