பகவானின் பேரழகு:

ஸ்ரீபரமபதநாதன், கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு, ஆதிசேஷன் குடைபிடிக்க, சிம்மாசனத்தில் சங்கு சக்ரதாரியாகத் திருமாமணி மகுடம் தாங்கி, புன்னகை தவழ, தனது வலது திருவடியை மடித்தும், இடது திருவடியைத் தொங்கவிட்டுக் கொண்டும் கம்பீரமாக, அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளிக்கின்றார். பரமனின் இடது கரம் தரையில் ஊன்றியும், இடது திருவடியின் பின்புறம் சற்றே எழும்பியும், இடது காலின் கட்டைவிரல் சற்றே பூமியை அழுத்தியும் உள்ள திருக்கோலம், தன்னை நினைக்கும் பக்தனின் இடத்திற்கு, தானே நேரில் சென்று அபயமளிப்பதாக உள்ளது. மடித்த வலது திருவடியின் மீது தன் நீட்டிய வலது கரத்தைத் தன் திருவடி நோக்கிக் காண்பித்திருப்பது, தன்னை உளமார நினைத்து தன் திருவடியை சரணடைபவர்களுக்கு நான் ஊன்றுகோலாகத் திகழ்வேன் என்பதைக் காட்டுகிறது. பகவானின் நெற்றிப் பொட்டைக் கூட கல்லிலே மிக அருமையாகப் படைத்திருக்கிறான் அந்த தெய்வீகச் சிற்பி.

பகவானின் வலதுபுறம் ஸ்ரீதேவித் தாயார் தனது வலது திருவடியைத் தொங்கவிட்டு, இடது திருவடியை மடித்துக் கொண்டும், இடதுபுறம், ஸ்ரீபூமிதேவித் தாயார் தனது வலது திருவடியை மடித்து, இடது திருவடியைத் தொங்கவிட்டுக்கொண்டும் அமர்ந்து ஸேவை ஸாதிக்கின்றனர்.

பரமபதநாதனின் தெய்வீக சக்தி:

திசைமுகன்சேரியில் எழுந்தருளியிருக்கும் பரமபதநாதனை அஷ்டாக்ஷர மந்திர மூர்த்தி என பெரியோர்கள் பூஜித்து வருகின்றனர். இப்பெருமானின் கருவறை முன் அமர்ந்து, அஷ்டாக்ஷர மகா மந்திரமாகிய “ஓம் நமோ நாராயணாய” என்னும் திவ்ய மந்திரத்தை எவர் ஒருவர், ஒரு மண்டலம் வரை தினந்தோறும் 108 அல்லது 1008 தடவை பக்தி ஸ்ரத்தையுடன் சொல்லி பூஜித்து வருகிறார்களோ, அவர்களுக்கு துன்பங்கள் அகன்று நன்மைகள் ஏற்படுவது, பிரத்தியக்ஷமான அனுபவமாகும்.