ஸ்தல புராணம்

அனைத்து ஜீவராசிகளையும் சிருஷ்டி செய்யும் பிரம்மதேவருக்கு நான்கு திருமுகங்கள்.ருக், யஜூர், சாம, அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களையும் திசைக்கு ஒன்றாக நான்கு திசைகளையும் நோக்கி சதா ஸ்மரணம் செய்து கொண்டிருப்பதற்காகவே நான்கு முகங்களை ஏற்றதால், பிரம்மனுக்கு திசைமுகன் என்ற திருப்பெயர் ஏற்பட்டது. சதா வேதங்களைச் சொல்லிக்கொண்டிருப்பதால், அனைத்து ஜீவராசிகளையும் படைக்கும் சக்தியைப் பெற்றார் பிரம்மதேவன்.

ஒரு சமயம், பிரம்ம தேவருக்கு வேதங்களின் பொருள்பற்றி ஐயம் ஏற்பட்டது.அந்தச் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள, தனது படைப்புத் தொழிலை நிறுத்திவைத்து, பகவான் ஸ்ரீமன் நாராயணனைக் குறித்து மிகக் கடுமையான தவத்தினை மேற்கொண்டார் பிரம்மா. தன் தவத்தை மேற்கொண்ட பரம பவித்திரமான இடமே திசைமுகன்சேரி என்கிற புண்ணிய பூமியாகும். பிரம்ம தேவரின் மிகக் கடுமையான தவத்தினால் திருவுள்ளம் உகந்த ஸ்ரீமன் நாராயணன், பரம பதம் என்னும் தனது திவ்ய உலகில் எழுந்தருளியுள்ளபடி பிரம்மனுக்குக் காட்சியளித்து, வேத ரகசியங்களை உபதேசித்தருளினார்.

கூர்மாதீன் திவ்யலோகம் – தனது மணிமயமண்டபம்
தத்ரசேக்ஷின் தஸ்மின் தர்மாதிபீடம் – ததுபரி கமலம்
சாமரக்ராஹிணீச்ச விஷ்ணுதேவிம் விபுஷாயுத கணமுரசும்
பாதுகே வைநதேயம் ஸேநேஸம் துவாரபாலாந்
குமுதமுக கணாந் விஷ்ணு பக்தாந் ப்ரபத்யே!

என்றபடி பகவான் முக்திநிலை என்று பெரியோர் போற்றி வணங்கும் புண்ணிய உலகமான பரமபதத்தில், தான் வீற்றிருக்கும் அற்புதமான தரிசனத்தைப் பிரம்மதேவருக்கு அளித்துத் திருவருள் புரிந்தார். பிரம்மதேவரின் வேண்டுகோளின்படி, அந்த திவ்ய தரிசனத்தை எக்காலத்திலும் பக்தர்கள் அனைவரும் தரிசித்து, அதன் பலனாகப் பாவங்கள் நீங்கி நல்வாழ்வு பெறவேண்டி, அதே பரமபத திருக்கோலத்தில் ஸ்ரீமன் நாராயணனும் திசைமுகன்சேரியில் எழுந்தருளிவிட்டான்.